ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச்சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது. ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள், எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுத் தேசியக் கொடிகளின் சின்னம், நிறம், அளவு என்பன வேறுபடடிருக்கும். தேசியக்கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

நாட்டைப் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடி யை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.

நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றை விடவும் உயர்ந்தாக தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. என வேதான், ஒரு நாட்டின் எந்தவொரு சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை, அரசுப் பணி யாளர் அனைவரும் தேசியக்கொடி வணக்கம் செய்கின்றனர்.

தேசியக்கொடிக்கு வழங்கப்படும் மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போல், தேசியக் கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெரும் குற்றமாக கருதப்பட்டு, அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு(தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற கொடி வணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்கு முறை வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம் கொடிவணக்கம் என்பவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறையை மீறுவதும் தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.

சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின்போது தேசியக் கொடியை ஏந்திச் செல்வதும், ஏந்தி நிற்பதும்கூட
கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக் கொடியேற்றுபவர்களும், கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும், தேசியக் கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்கள். கொடியேற்றுபவர்கள் தேசியக் கொடியேற்ற நிகழ்வின் போது உயிர் போகின்ற நிலைவரினும் கொடியை கைவிடாத் தன்மையைக் கொண்டிருப்பார். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ, கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காக, தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கும்.

தலைவர்கள், சிறப்புகுடிமக்கள் போன்றோரின் மறைவையொட்டி ஏற்படும் நாட்டின் துயர நிகழ்வுகளின்போது தேசியக் கொடி கொடிக்கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் நடுப்பகுதிவரை இறக்கிக் கட்டிப் பறக்கவிடப்படுவது வழக்கம். இதன் மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது.

கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி ,நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்தில் பறப்பதோ நாட்டின் மிகு துயரை உணர்த்துவதாயின் , தேசியக்கொடி சிதைவுறுவதோ, இழிவு படுத்துவதோ, கீழே விழுத்தப்படுவதோ, வீசப்படுவதோ கால்களால் மிதிப்படுதோ எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலையாகும்

வரலாறு

1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவரும் புலிக்கொடியில் உள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு மாவீரர் நாளிலிருந்து ( 27.11.1990 ) அறிவிக்கப்பட்டு அன்று முதல் தமிழீழத்தின் தேசியக் கொடியாக இருந்து வருகின்றது.

எமது தேசியக்கொடியை மூன்று நிறங்கள் அலங்கரிக்கின்றன மஞ்சள், சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள் தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை, தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமையை நிலை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.

தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழத் தனியரசை அமைத்து விட்டாற் போல நாம் முழுமையாக விடுதலை பெற்றதாகக் கொள்ளவிடமுடியாது. தமிழீழ சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்கு சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமத்துவமும் சமதர்மமும், சமூக நீதியும் நிலை நாட்டப்படவேண்டும். இப்படியான புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டி எமது அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப் பாதை கரடுமுரடானது, சாவும், அழிவும், தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டுமென்றும், தளராத உறுதி வேண்டும் என்பதைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

தேசியக் கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பத்தின் உயரம் 22| க்கு குறைவாக இருக்ககூடாது.

தேசியக் கொடியின் அளவு 4.5 : 3| அளவாக இருத்தல் வேண்டும்.

தேசியக் கொடியுடன் வேறு கொடிகளும் ஏற்றப்படின் அக்கொடிகள் தேசியக் கொடியைவிடப் பெரிதாக இருக்கப் கூடாது.

தேசியக் கொடியேற்றப்பட்ட கொடிக்கம்பத்தைவிட ஏனைய கொடிக்கம்பங்கள் 2| உயரம் குறைந்தாக இருக்க வேண்டும்.

தேசியக் கொடியுடன் பிறநாடுகளின் தேசியக்கொடிகள் ஏற்றப்படுவதாயின் ஓரே அளவு உயரமுள்ள கொடிக்கம்பத்தில் ஓரே அளவான கொடிகளை ஏற்றலாம். ஆனால், எமது தேசியக் கொடிக்கு இடப்புறமாகவே ஏனைய நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படவேண்டும்.

எமது தேசியக் கொடியுடன் பிறநாட்டுத் தேசியக் கொடிகளை ஏற்றுவதாயின் எமது தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்பே ஏனைய தேசியக் கொடிகள் ஏற்றப்படவேண்டும்.

கொடிகள் இறக்கப்படும்போது, ஏனைய கொடிகள் இறக்கப்படவேண்டும். பின்பு இறுதியாகவே எமது தேசியக்கொடி இறக்கப்பட வேண்டும். ஏனைய கொடிகள் பறந்து கொண்டிருக்கும் போது எமது தேசியக் கொடியை ஒரு போதும் இறக்கக்கூடாது.

ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச் செல்வதாயின் கொடியின் உயரத்தின் 4 பங்கு உயரமான கம்பத்தில் கட்டி நெஞ்சுக்கு நேராகவோ அன்றி வலத்தோளிலோ ஏந்திச் செல்ல வேண்டும். தேசியக் கொடியை ஏந்திச் செல்பவருக்கு முன்பாக வேறு எந்தக் கொடியை ஏந்துபவரும் முந்திச் செல்லக்கூடாது.

கூட்ட மேடைகளில் பேச்சாளரின் தலைக்கு மேலாக பின் புறத்தட்டில் தேசியக் கொடியைக் கட்டலாம்.

தேசியக் கொடியில் எதுவும் எழுதப்பட்டிருக்கக் கூடாது.

தேசியக் கொடி கிழிந்தோ, சிதைந்தோ போனால் அதைப் பழந்துணியாகப் பயன்படுத்தவோ, குப்பை த்தொட்டியில் வீசவோ கூடாது.

தேசியக் கொடியை வணிக விளம்பரத்துக்கோ, விரிப்பாகவோ அன்றி வேறெந்த தேவைகளுக்கா கவோ பயன்படுத்தக் கூடாது.

குறிப்பிட்ட சில உயர் அரச பணியகக் கட்டிடங்களில் மட்டும் தேசியக் கொடி கொடிக்கம்பத்தில் ஏற்றப்படலாம்.

கட்டடங்களில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்குப் முன்பாக இறக்கப்படவேண்டும்.

ஆட்சிப் பொறுப்பிலுள்ளோர், தலைவர்கள், உயர் அலுவலர்கள் வீடுகளிலும் எந்நாளும் பகலில் தேசியக் கொடி பறக்க விடப்படலாம்.

நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக் கொடி நாள் தோறும் பறக்கவிடப்படலாம்.

வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும், தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக் கொடி பறக்க விடப்படலாம்.

குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் பொதுமக்கள் வீடுகளில், கட்டிடங்களில், தேசியக்கொடி பறக்க விடப்படலாம். இவை முறையாகக் கம்பங்களில் மட்டுமே ஏற்றப்படவேண்டும்.

தெருவுக்கு குறுக்காகவோ பக்கமாகவோ கயிறுகளில் தேசியக் கொடி தொக்கவிடப்படக் கூடாது.

தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விடக்கூடாது. தேசியக்கொடியிலுள்ள புலி, கொடிக்கம்பத்தைப் பார்த்தவாறு பறக்கவிடக்கூடாது. புலியின் பார்வை கொடிக்கம்பத்துக்கு எதிர்புறமாகக் கொடி பறக்கும் பக்கமாக இருக்கும் வகையில் கொடி பறக்க வேண்டும்.

தேசியக் கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றப்படவேண்டும். மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்த விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது.

தேசியக் கொடியை ஏற்றுபவர் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்து நிற்கும் மக்களுக்கும், கொடிக் கம்பத்திற்கும் இடையில் நின்று கொடியை ஏற்றுதல் கூடாது.

தேசியக் கொடியை ஏற்றும் போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும்.

தேசியக் கொடி ஏற்றப்படுவது போல், இறக்கப்படுவதும் ஒழுங்கு முறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்க வேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்மையானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும்.

தேசியக் கொடி இறக்கப்படும் பொழுது நிலத்தில் விழாது எட்டக்கூடடிய உயரத்திலேயே வைத்து கைகளில் ஏந்தி எடுத்தல் வேண்டும். தேசியக் கொடி இறக்கும் நிகழ்வின்போது கையொலி எழுப்பக் கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெற வேண்டும்.

தேசியக் கொடி பொதுவாக மாலை 6.00 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை முறைப்படி இறக்கலாம்.

கொடியேற்றித் தொடங்கப்படும் நிகழ்ச்சி நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும் வரை தேசியக் கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக் கொடி இறக்க வேண்டும்.

gpujhd gf;fk;